மெட்ராஸ்காரன்: திரை விமர்சனம்

0 1

ஷான் நிகம், கலையரசன் நடிப்பில் வெளியாகியுள்ள மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

கதைக்களம்
சத்யா (ஷான் நிகம்) தான் காதலித்த பெண்ணுடன் சொந்த ஊரான புதுக்கோட்டையில் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடுகளை செய்கிறார். மறுநாள் திருமண என்ற நிலையில் ஏடிஎம்மிற்கு செல்லும் சத்யாவுக்கும், அங்கு ஒரு ஆளை அடிக்க தயாராக நிற்கும் துரைசிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் சத்யா, மணப்பெண்ணை பார்க்க அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு காரில் போகும்போது கர்ப்பிணி பெண் ஐஸ்வர்யா தத்தா மீது மோதி விடுகிறார். இதனால் அவரது உறவினர்கள் ஒன்று கூடி சத்யாவை தாக்க முயல, முதலில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று பேசி அழைத்து செல்கிறார் சத்யா.

அங்கு ஐஸ்வர்யா தத்தாவின் சகோதரரான அரசியல்வாதியும், கணவர் துரைசிங்கமும் வருகிறார். சிகிச்சையில் இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறந்து விடுகிறது. இதன் காரணமாக குற்ற உணர்ச்சியில் சத்யா தாமாக சரணடைந்து சிறைக்கு செல்கிறார். அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? காதலியை மீண்டும் கரம் பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

சென்னையில் கஷ்டப்பட்டு உழைத்து தனது திருமணத்தை சொந்த ஊரில் தடபுடலாக நடத்த வேண்டும் என்று ஷான் நிகம் ஏற்பாடுகளை செய்கிறார். திருமணத்திற்கு தயாராகும் வீடு எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சத்யாவாக வரும் ஷான் நிகம் பேசும் தமிழில் மலையாள சாயல் தெரிவது ஆரம்பத்தில் உறுத்தலாக இருந்தாலும் அவரது நடிப்பால் அதனை மறக்கடிக்க செய்கிறார். கலையரசன் துரைசிங்கம் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். முதல் பாதிவரை பரபரப்பாக செல்ல வேண்டிய திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் ஏதோ ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என்பதை யூகிக்க முடிந்த நிலையில், வில்லனின் பின்னணி மற்றும் அவர் செய்த குற்றங்கள் என கதை எங்கெங்கோ செல்கிறது. அதிலும் சுவாரஸ்யம் இல்லை. வலுவில்லாத திரைக்கதையில் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாதது போல் இருக்கிறது கிளைமேக்ஸ்.

நடிப்பை பொறுத்தவரை கருணாஸ், தீபா உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை மற்றும் கல்யாண பாடல் ஆறுதல். படத்தின் கதைக்கும் தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லை. புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ஹீரோ வேலைக்காக தான் சென்னை சென்றிருக்கிறார். மேலும் நீ எந்த ஊரு என உள்ளூரில் கேட்கும்போது சென்னை என்கிறார். இதுபோல் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் படத்தில்.

கிளாப்ஸ்
நடிப்பு

இசை

கேமரா ஒர்க்

பல்ப்ஸ்
வலுவில்லாத திரைக்கதை அழுத்தம் இல்லாத காட்சிகள் எமோஷனல் காட்சிகள் ஒட்டவில்லை

மொத்தத்தில் ஆராவாரமாக தொடங்கி அயர வைத்துவிட்டார் இந்த மெட்ராஸ்காரன்.

ரேட்டிங் : 2.25/5

Leave A Reply

Your email address will not be published.