இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் (Jerusalem) உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்குட்பட்டுள்ளார்.
அதில் அவரது சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து நெதன்யாகுவுக்கு நேற்றையதினம் (29.12.2024) புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நெதன்யாகு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நெதன்யாகுவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன் இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம், நெதன்யாகுவின் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும் பேஸ்மேக்கரும் உடலில் பொருத்தப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், நெதன்யாகுவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதேவேளை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரோஸ்டேட் நீக்க அறுவை சிகிச்சைக்காக பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெனின் தற்காலிக பிரதமராக பணியாற்றுவார்” என தெரிவித்துள்ளது.