பிரித்தானியாவிலிருந்து (uk) விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்காக பணம் வசூலித்து அனுப்பியதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையான தமிழர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தை அடுத்து இன்று (17) கொழும்பு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார்.
உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான இலங்கைத் தமிழர், விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரித்தானிய பிரஜை தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த சந்தேக நபர் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டார் என்றும் 2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கைது செய்யப்பட்ட பொழுது இந்த சந்தேக நபரும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்த முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு பயணமாகிய பின்னர் பிரித்தானிய பிரஜாவுரிமையும் பெற்றுக்கொண்டார்.
காவல்துறையினர் 2012 இல் சந்தேக நபருக்கு எதிராக நிதி சேகரித்ததாக நீதிமன்றில் அறிக்கையை தாக்கல் செய்து விசாரணை செய்த போதிலும் 2024 ஆம் ஆண்டு கைது செயப்படும்வரை இவருக்கெதிராக காவல்துறை விசாரணையில் நீதிமன்றில் எவ்வித சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதோடு சந்தேக நபர் எந்த குற்றத்தை புரிந்தார் என்பதை காவல்துறையினர் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடவில்லை.
2010 ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை சந்தேக நபர் இலங்கைக்கு எந்த விஜயமும் மேற்கொண்டிருக்கவில்லை என்பதை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் மேலும் தனது வாதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இவ்வாறான சட்டரீதியற்ற கைதுகளினால் புலம்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதுடன் சுற்றுலாத்துறையிலும் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதுடன் இது இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும், என்பதனையும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
கடந்த 06 ஆம் திகதி குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பிரித்தானிய பிரஜையினால் நிதி அனுப்பப்பட்டதாக கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் விசாரணையில் தனது பெற்றோருக்கே நிதி அனுப்பியதாக தெரியவந்துள்ளது பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா என்ற வாதத்தையும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் முன்வைத்ததை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபரை விடுதலை செய்தார்.