சபாநாயகரின் சர்ச்சைக்குரிய கலாநிதிப் பட்டம் : நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து மாயம்

0 4

சபாநாயகர் அசோக ரன்வலவின் (Ashoka Ranwala) கலாநிதிப் பட்டம் தொடர்பான தகவல் நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (National People’s Power) அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் போட்டியிட்ட அசோக ரன்வெல , வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார்.

அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னை ஒரு கலாநிதியாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும் சபாநாயகர் அசோக ரன்வெல குறிப்பிடுவது போன்று அவர் மொரட்டுவை பல்கலைக்கழக பட்டதாரியோ, ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறவோ இல்லை என்று அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன.

குறித்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சபாநாயகர் பதவி விலக வேண்டுமென்று பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (09.12.2024) தொடக்கம் நாடாளுமன்ற இணையத்தளத்தில் சபாநாயகரின் விபரங்கள் தொடர்பான பக்கத்தில் அவரது கலாநிதிப் பட்டம் தொடர்பான விபரங்கள் நீக்கப்பட்டுள்ளது.

இதுகாலவரையும் கலாநிதி கௌரவ அசோக ரன்வெல என்று குறிப்பிடப்பட்டிருந்த அவர், கலாநிதிப் பட்டம் இன்றி கௌரவ அசோக ரன்வெல என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.