போதிய அரிசி மற்றும் தேங்காய் இல்லாததால் சதொச விற்பனை நிலையத்திற்கு வந்த பல வாடிக்கையாளர்கள் இன்றும் (08) ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், அவற்றை சலுகை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை சதொச நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்தது.
அதன்படி இன்று சதொச கடைகளில் அரிசி மற்றும் தேங்காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. எனினும் இன்று சில சதொச கடைகளில் அரிசி மற்றும் தேங்காய் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க ஏற்கனவே பல இறக்குமதியாளர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இருப்புக்களுக்கு ஓடர் செய்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
Comments are closed.