வெளிநாட்டிலிருந்து வந்த அச்சுறுத்தல் : பூஸா சிறை அத்தியட்சகருக்கு கடும் பாதுகாப்பு

16

காலி பூஸா சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதாள உலகக் குழு உறுப்பினரான ஹினாதயான சங்கா, பூஸா சிறைச்சாலை அத்தியட்சகருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தமையே இதற்குக் காரணம்.

நேற்று முன்தினம் (11) பிற்பகல் கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலை அத்தியட்சகரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் வீட்டில் இருந்த சிறைச்சாலை அத்தியட்சகரின் தந்தையிடம் அழைப்பு வருவதாகக் கூறி கைபேசியைக் கொடுத்துள்ளார்.அவர் பதிலளிக்கையில், அழைப்பில் இருந்த நபர், தான் துபாயில் தங்கியிருக்கும் ஹினாதயான சங்கா என்று கூறினார்.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது உறவினர்களை விடுதலை செய்ய சந்தர்ப்பம் வழங்குமாறும், அவ்வாறு வழங்காவிட்டால் சிறைச்சாலை அத்தியட்சகரை கொலை செய்வதாகவும் குறித்த அதிகாரியின் தந்தையிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பூஸா சிறைச்சாலை அத்தியட்சகர் கட்டுநாயக்க காவல்துறையில் முறைப்பாடும் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிறைச்சாலை அத்தியட்சகர் பூஸா சிறைச்சாலையின் கடமைகளுக்கு 06 மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.