இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஒருவரால், நேற்று நீதிமன்றத்தில் தம்மைப் பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள், நீதிமன்றத்தை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாக அமைந்துள்ளன. எனவே, இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனது சட்டத்தரணிகளுடன், தாம் கலந்தாலோசித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் சமர்ப்பிப்புகளை முன்னிலைப்படுத்தும் ஊடக அறிக்கைகளை, ரணில் தமது அறிக்கையில் கோடிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்வதற்கான விண்ணப்பம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணி, ஆணைக்குழுவின் சட்டத்தரணி அளித்த இந்த சமர்ப்பிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவோ இந்த சமர்ப்பிப்புக்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ரணில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அமைச்சர் சமந்த வைத்தியரத்னவின் அறிக்கையால் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டதா என்பது குறித்து சாமர சம்பத்தின் மனைவி தன்னிடம் ஆலோசித்ததாக விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் தாம் ஒரு சட்டத்தரணியாக ஆலோசனை வழங்கியதால், எந்த வெளிப்படுத்தல்களையும் மேற்கொள்ள முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சரின் கீழ் ஒரு அதிகாரசபையில் உள்ள நிதியிலிருந்து பணத்தை திரும்பப் பெற முடியாது என்றும், எனவே, நிலையான வைப்புத்தொகையில் வைத்திருக்கும் பணம் அரசியலமைப்பை மீறுவதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் தம்மை பற்றி நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த சமர்ப்பிப்புகள் நீதிமன்றத்தை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இலஞ்ச ஊழல்கள் தொடர்பான ஆணைக்குழு, விசாரணை நடத்திய விதம் குறித்து தாம் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரசாங்கத்திற்கு 1.76 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக கூறி தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நேற்று மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி ஒருவர், தசநாயக்க ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான ஒரு நிலையான வைப்பு கணக்கிலிருந்து அதன் முதிர்ச்சிக்கு முன்பே நிதியை எடுத்ததாகவும், இதனால் அரசுக்கு கணிசமான நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், 2015 ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட திறைசேரி சுற்றறிக்கை, மாகாண சபைகள் அத்தகைய நிலையான வைப்புகளை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதித்ததாகக் கூறியிருந்தார்.
எனவே தசநாயக்கவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை அல்ல என்றும் அவர் வாதிட்டிருந்தார்.
இருப்பினும், இலஞ்ச ஒழிப்பு ஆணையக அதிகாரிகள்,நேற்று நீதிமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் கூற்றை எதிர்த்தனர்.
குறித்த சுற்றறிக்கை நவம்பர் 22, 2016 அன்று வெளியிடப்பட்டது என்றும், கேள்விக்குரிய நிதி திரும்பப் பெறுதல், 2016 பெப்ரவரி 29 ஆம் திகதியன்று இடம்பெற்றது என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியிருந்தார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் விக்ரமசிங்கவை ஒரு வாக்குமூலம் பதிவு செய்ய அழைத்ததாகவும், இதன்போதே அந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்ட உண்மையான திகதி தெரியாமல் முன்னாள் ஜனாதிபதி தனது பகிரங்க கருத்துக்களை வெளியிட்டது தெரியவந்தது என்றும் நீதிமன்றத்தில், இலஞ்ச ஊழல்கள் தொடர்பான ஆணையகத்தின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஊடக சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்ட விக்ரமசிங்கவின் அறிக்கை, நடந்து வரும் விசாரணையை மோசமாக பாதித்ததாகவும் விசாரணையை நடத்தும் அதிகாரி கூறியுள்ளார்.
இந்தநிலையில் சாமர சம்பத் தசநாயக்கவின் மனைவியின் வேண்டுகோளின் பேரில் விக்ரமசிங்க குறித்த அறிக்கையை வெளியிட்டார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்;டுள்ளது.
எனவே தசநாயக்கவின் பிணையை ரத்து செய்து விசாரணையில் தலையிட முயன்றதாகக் கூறி அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்று, விசாரணை அதிகாரி,நீதிமன்றத்தை கோரினார்.
இருப்பினும், சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது.