பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தால் ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று (07) அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 60இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கேணல் சோபியா குரேஷி, விங் கொமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஒப்பரேஷன் சிந்தூர் எப்படி நடத்தப்பட்டது என்று விளக்கியுள்ளனர்.
எந்தெந்த பயங்கரவாத முகாம்களில் எந்தெந்த பயங்கரவாதிகள் குறிவைக்கப்பட்டனர் என்று அவர்கள் விரிவாக எடுத்துக்கூறியுள்ளனர்.
சோபியா குரேஷி பேசுகையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஒப்பரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இரவு 1.05 முதல் 1.30 வரை ஒப்பரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது…
ஒப்பரேஷன் சிந்தூர் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டன. நாங்கள் சாதாரண குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்கள் குறிவைக்கப்பட்டனர். பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் தொடர்பான வீடியோவும் இந்த சந்திப்பில் வெளியிடப்பட்டுள்ளது.