குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் அதுசார்ந்த வறுமையைக் குறைக்கும் நோக்கிலும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உதவித்தொகையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“உங்களுக்கொரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” என்ற வீடமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கி வீடொன்றை நிர்மாணிப்பதற்காக கட்டுமான முன்னேற்ற அடிப்படையில் உதவித்தொகையொன்று வழங்கப்படுகின்றது.
தெரிவு செய்யப்பட்ட பயனாளியொருவர் குறைந்தபட்சம் 550 சதுர அடி வீடொன்றை அமைக்க வேண்டியதுடன், அதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 650,000 ரூபாய் உதவித்தொகைக்கு மேலதிகமாக எஞ்சிய தொகையை குறித்த பயனாளி பங்களிப்புச் செய்ய வேண்டும்.
வேலைத்திட்ட ஆரம்பத்தில் ஒரு வீட்டுக்கான மதிப்புச்செலவு 1,147,000 ரூபாவாக இருப்பினும் தற்போது குறித்த செலவு 1,764,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அரசின் உதவி தொகைக்கு மேலதிகமாக எஞ்சிய தொகையை பங்களிப்புச் செய்ய தேர்ந்தெடுக்கப்படுகின்ற பயனாளிகளுக்கு பொருளாதார வசதி இன்மையால் தற்போது வீடொன்றுக்கு வழங்கப்படுகின்ற 650,000 ரூபாவான அரச உதவித்தொகையை 1,000,000 ரூபா வரை அதிகரிப்பதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.