எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதியிலிருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (8) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த தேர்தல்களில் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து ஏமாற்றமடைந்தனர். ஆனால் இம்முறையும் அவ்வாறு ஏமாற்றமடைவதற்கு மக்கள் தயாராக இல்லை.
எனவே பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியும் அங்கிருந்தே ஆரம்பமாகும்.
மே 6ஆம் திகதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தம்மை ஏமாற்றிய அரசாங்கத்துக்கு மக்கள் அன்றைய தினம் தமது வாக்குகளால் பாடம் கற்பிக்க வேண்டும்.
தேர்தலின் பின்னர் எமது கட்சியின் கொள்கை மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்ல முன்னர் கட்சியில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.