ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப இந்த வருடத்துக்குள் நடவடிக்கை: பிரதமர் உறுதி

0 5

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(18.02.2025) செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சாமர சம்பத் தசநாயக்க எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 சாமர சம்பத் தசநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது,

“மாகாண சபை பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டு வந்தார்கள்.

எனினும், அதற்கான கால எல்லையை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கல்வி அமைச்சர் அறிவாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர்,

“தேசிய பாடசாலைகளிலிருந்து மேலதிகமாகக் காணப்படும் ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளில் மேலதிகமாக காணப்படும் ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எனினும், நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது நிறுத்தப்பட்டிருந்தது. எனினும், பின்னர் கிடைத்த நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மீண்டும் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்தவகையில் இந்த வருட இறுதிக்குள் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.