ரிஷி கட்சி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால்… புலம்பெயர்தல் மீதான நிலைப்பாடு இதுதான்

18

கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று அக்கட்சியின் தலைவரான ரிஷி சுனக் வெளியிட்டுள்ள நிலையில், புலம்பெயர்தல் குறித்த அக்கட்சியின் நிலைப்பாட்டை தேர்தல் அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, அரசியலில் புலம்பெயர்தல் பெரும் பங்கு வகிக்கிறது. அதாவது, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் கட்சிக்கே, பிரித்தானிய மக்களுடைய ஆதரவு என்னும் ஒரு நிலை காணப்படுகிறது.

ஆகவே, கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் புலம்பெயர்தலைக் குறிவைப்பதாக அமைந்துள்ளன. அவ்வகையில், நேற்று, அதாவது, ஜூன் மாதம் 11ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரிஷி சுனக்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்களில் ஒன்று, சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைப்பதும், சட்டவிரோத புலம்பெயர்தலை தடுத்து நிறுத்துவதும் ஆகும்.

தங்கள் தேர்தல் அறிக்கையில் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள ரிஷியின் கட்சி, அதே நேரத்தில், பணியாளர் தட்டுப்பாடு உள்ள தொழில்களுக்கும், அரசு மருத்துவத்துறைக்கும் தேவையான திறமை மிக்க வெளிநாட்டவர்களை கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோரால், பிரித்தானிய மக்களுக்கு அரசு வழங்கும் சேவைகள் கிடைப்பதிலும், வீடுகள் கிடைப்பதிலும் எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைக்கப்பட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, தாங்கள் மீண்டும் ஆட்சியமைத்தால், புலம்பெயர்தலை பாதியாகக் குறைப்பதாகவும், ஆண்டுதோறும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை மேலும் குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ரிஷி.

Comments are closed.