பிரித்தானிய பாராளுமன்ற தேர்தல் – இரு தமிழ் பெண்கள் போட்டி: 5 பிரதமர்களை சந்தித்த கன்சர்வேற்றீவ் கட்சி – வெற்றி யாருக்கு?
பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. இம்முறை தொழிற் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இரண்டு தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தல் உலகெங்கிலும் கவனிக்கத்தக்க ஒன்றாக விளங்குகிறது
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேற்றீவ் கட்சி (Conservative Party) வெற்றி பெற்றிருந்தது. கடந்த 2010–2016 வரை டேவிட் கமரூன் (David Cameron) பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறும் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளினால் டேவிட் கமரூன் பதவி விலகினார். இதனால் திரேசா மே (Theresa May) 2016 ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.
பின்னர் பொறிஸ் ஜோன்ஸன் (Boris Johnson) 2019 ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தார்.
அதன் பின்னர் லிஸ் ரெஸ் (Liz Truss) 2022ஆம் ஆண்டு பதவி வகித்திருந்தார்.
பின்னர் 2022 ஆண்டு அதாவது அதே ஆண்டில் இருந்து ரிசி சுன்னக் (Rishi Sunak) பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.
14 வருடங்களாக பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியான கன்சர்வேற்றீவ் கட்சியின் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சி செய்து வந்தது.
இந்த 14 வருட ஆட்சியில் நான்கு பிரதமர்களையும் அக் கட்சி சந்தித்திருந்தது. அதாவது பிரித்தானிய மக்கள் ஒரே கட்சிக்குள் நான்கு பிரதமர்களைக் கண்டுள்ளனர்.
அதே நரம் 14 வருடங்களாக தொழிற் கட்சி அரசாங்கம் (Labor government) என்று ஒன்று காணாமலே போய்விட்டது.
ஆனாலும் கன்சர்வேற்றீவ் கட்சியின் செயற்பாடுகளினால் பல தொய்வுகள் ஏற்பட்டு பல கஷ்டங்களை பிரித்தானிய மக்கள் எதிர்நோக்கினர்.
இப் பின்னணியிலேதான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கன்சர்வேற்றீவ் ஆட்சியில்தான் பிரெக்சிட்டு (Brexit) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியது.
2016இல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 52% பிரித்தானியர் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரித்தானிய அரசு 2017 மார்ச்சில் வெளியேற்றத்தை முறைப்படி அறிவித்து.
இந்த ப்ரெக்ஸிட் முறைமை பிரித்தானிய பொருளாதாரத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்போதுதான் மக்கள் அதனைப் புரிந்துகொள்கின்றனர்.
பிரித்தானியப் பொதுத்தேர்தலைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் தொழிற்கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
தொழிற்கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்பது ஓரளவு உறுதியாகத் தெரிகிறது.
பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் கை ஓங்குவதற்கான காரணங்கள் பல. அதேநேரம் தொழிற் கட்சியில் இரண்டு தமிழ் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை முக்கியமானது.
சட்டன் தொகுதியில் கிருஷ்ணி ரிஷிகரன், கிழக்கு லண்டன் ஸ்டர்ட்ஃபோர்ட்டில் உமா கிருஷ்ணன் ஆகியோரே போட்டியிடுகின்றனர்.
இதனால் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் இம்முறை வாக்களிப்பில் அதிக அக்கறை காட்டுவார்கள் என்று நம்பலாம்.
இலங்கைத்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த இரு தமிழ்ப் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகி, பின்னர் அமைச்சராகும் வாய்ப்புக்களும் அதிகமாகத் தெரிகிறது.
எனவே இந்த முறை பிரித்தானியாவின் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு சாதனையைச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை கன்சர்வேற்றீவ் கட்சி, தொழிற்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த பல தந்திரங்களை செய்தது. உதாரணத்துக்கு, கறுப்பின பாராளுமன்ற உறுப்பினரான டயான் அபோட்டை ஒதுக்கி வைத்தனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வாக்குகளைச் சிதறச் செய்யலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனாலும் தொழிற் கட்சி அதனை சாணக்கியமாகக் கையாண்டுள்ளது.
Comments are closed.