போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நடுநிலையாக இல்லை : ஈரான் சாடல்

15

காசா (Gaza) போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா (USA) நடுநிலையாக செயல்படவில்லை என ஈரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனி (Minister Ali Bagheri Kani) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், தோஹாவில் நடந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, காசாவில் நடைபெற்ற தாக்குதல்களையும், தெல் அவிவ் நகரில் ஆட்சி செய்கின்ற குற்றவாளிக் கும்பல் மற்றும் அவர்களின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவின் வஞ்சகம் மற்றும் பொய்மை தன்மையையும் தாம் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, காசாவிலுள்ள சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு போர் ஆயுதங்களை வழங்குவதன் மூலம், இஸ்ரேலுக்கு (Israel) ஆதரவாக செயல்படுவதனால் அமெரிக்கா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஒரு நடுநிலையான மத்தியஸ்தராக செயல்படவில்லை என கூறியுள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் (Hamas) தனது உத்தியோகபூர்வ டெலிகிராம் சேனலில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமெரிக்க அரசு மற்றும் பிற மேற்குலக நாடுகளும் இணைந்து காசா இனப்படுகொலைக்கு தேவையான ஆதரவு மற்றும் நேரத்தை வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது இவ்வாறிருக்க, காசா பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் பிறகு, இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் நோக்கில், தனது வெளியுறவுத் துறை செயலாளரை இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.