களுத்துறை வைத்தியசாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம்: அவசரமாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள்

15

களுத்துறை தாய் மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் திடீரென தீ எச்சரிக்கை கருவி இயங்கியமையினால் வைத்தியசாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (13) இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக வைத்தியசாலை ஊழியர்களும், நோயாளர்களும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து, களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரை உடனடியாக வரவழைத்து பாதுகாப்புப்படையினரும், வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து வைத்தியசாலை கட்டடத்தில் இருந்து நோயாளிகளை வெளியேற்றியுள்ளனர்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வைத்தியசாலையின் மின் அமைப்பு மற்றும் வைத்தியசாலையை சுமார் ஒரு மணி நேரம் கண்காணித்து, பாதுகாப்பை உறுதிசெய்த பின்னர் நோயாளிகள் மற்றும் மவைத்தியசாலை ஊழியர்களை மீண்டும் உள்ளே அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கபட்ட விசாரணையில் இரண்டாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த தீ எச்சரிக்கை அமைப்பை ஒருவர் இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments are closed.