யாழில் அரச வளங்களை முடக்கும் வைத்திய அதிகாரிகள் : கேள்வி கேட்கும் பொதுமகன்

14

சாவகச்சேரி (Chavakachcheri) ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றியது யார் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை மீள இயக்கக்கோரியும் வைத்திய மாபியாக்களை வெளியேறுமாறு கோரியும் நேற்று (08.07.024) இடம்பெற்ற போராட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு வினவியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல பொருட்கள் மக்களுக்கு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சுமார் பத்து வருடங்களாக குறித்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய விடாமல் சில வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கம் மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ள உபகரணங்களை வழங்கினாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள் அதற்கு தடையாக இருக்கின்றனர்.

இந்த வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான இயந்திரம் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இதை யார் வெளியேற்றினார்? யாருடைய தேவைக்காக இது இடம்பெற்றது என்பது தொடர்பில் பொறுப்பானவர்கள் மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

ஆகவே, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை அழிக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ள உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் சிலர் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.