கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தின் பாதுகாவலர்களை தாக்கிய இராணுவ பிரிகேடியர் ஒருவருக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு முந்திய பயிற்சிப் போட்டி நடைபெற்றுள்ளது.
அதற்கு முந்திய நாள் இரவு குறித்த பாடசாலையொன்றின் பழைய மாணவரான இராணுவ பிரிகேடியர் ஒருவர் எஸ்.எஸ்.சி மைதானத்திற்கு பொருட்கள் சிலவற்றை எடுத்து வந்து அவற்றை மேல் மாடிக்கு எடுத்துச் செல்ல லிப்டை இயக்குமாறு அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும், லிப்டின் சாவி தன்னிடம் இல்லை என்று குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பதிலளித்த போது அவரை கடுமையாக தாக்கிய பிரிகேடியர், அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை பாதுகாக்க முயன்ற சக உத்தியோகத்தர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், தற்போது இரண்டு பாதுகாப்பு ஊழியர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.