11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

0 2

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அம்பாறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை நகர பாடசாலை ஒன்றில் கடந்த மே 16 ஆம் திகதி மாலை தரம் 5 மாணவர்கள் 11 பேரின் பெற்றோர்கள் பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.

இதற்கமைய அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் குறித்த மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதான வைத்திய அறிக்கைகள் பெறப்பட்ட நிலையில் நேற்று(23) 11 மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய சந்தேக நபரான  சுஹதகம சிலாரத்தன தேரர் பின்னர் அம்பாறை மகளிர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தத் தாக்குதல் குறித்து அம்பாறை சிறுவர் மறுவாழ்வு மையம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்வித் துறையும் காவல்துறையும் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சந்தேக நபரை இன்று அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி தயானி கமகே கைது செய்தார்.

பின்னர் அம்பாறை நீதிமன்ற நீதவான் நவோமி விக்ரமரத்ன முன்னிலையில் சந்தேக நபர் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மறு விசாரணை எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன.

இதன் போது அன்றைய தினம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல மாணவர்கள் தண்ணீர் விசிறி சிறு விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பாடசாலை அதிபரான பௌத்த துறவி தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து 11 மாணவர்களையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிரம்புகள் உடையாத அளவுக்கு மாணவர்களின் முதுகில் கொடூரமாக அடித்துள்ளதாக பெற்றோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.