உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் முழு ஆவணங்களும், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிறப்பித்த உத்தரவின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தொடர்புடைய அறிக்கையை ஒப்படைக்க ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத்துறையினர் குறித்த ஆவணத்தை தீவிரமாக ஆராயவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த அறிக்கையின் எந்த குறிப்பிட்ட பதிப்பு ஆராய்ப்படவுள்ளது என்ற விடயம் வெளியாகவில்லை.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக இதுவரைக்காலமும் வெளிப்படுத்தப்படாத பல்வேறு விடயங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் முழு ஆவணங்களுக்குள்ளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
இதேவேளை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஆணைக்குழுவே, 2019 தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.