2010ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக களனி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் சிலர் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை (Prasanna Ranaweera ) கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டினுள் பிரசன்ன ரணவீரவின் மனைவியும் ஏனைய குடும்பத்தினரும் மாத்திரமே இருந்துள்ளனர்.
பின்னர் பிரசன்ன ரணவீரவின் மனைவி மற்றும் சாரதியிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தப்பிச் சென்ற முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தனது கையடக்கத் தொலைபேசியையும் துண்டித்துக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட 6 பேரை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.