இலங்கையின்(Sri Lanka) முதலாவது கேபிள் கார் செயற்திட்டத்துக்கு தடையாக செயற்படும் கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கம்பளையில் அமைந்துள்ள அம்புளுவாவை மலை உச்சியை தொடர்புபடுத்தும் வகையில் இலங்கையின் முதலாவது கேபிள் கார் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்று நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
அதற்காக சகல அரச நிறுவனங்களின் அனுமதியும் முறைப்படி பெறப்பட்டு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணியொன்றில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே குறித்த செயற்திட்டத்தில் குறுக்கீடு செய்துள்ள கம்பளை பிரதேச செயலாளர், செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடங்கல் ஏற்படுத்துவதில் தீவிரமாக முனைப்புக்காட்டி வருவதாக அண்மைக்காலமாக செய்திகள் வௌியாகியிருந்தன.
இந்நிலையில் கேபிள் கார் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் இது தொடர்பில் கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராகமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.
குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அதனை விசாரணை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் ஜுன் மாதம 12ஆம் திகதி மனு மீதான மேலதிக விசாரணைகள் நடைபெறவுள்ளது.