தொடருந்து சேவையில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்துள்ளார்.
மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இன்று(20) காலை பயணித்த தொடருந்திலேயே போக்குவரத்து அமைச்சர் பயணித்துள்ளார்.
இதன்போது, தொடருந்தில் தன்னுடன் பயணித்த பயணிகளிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அத்துடன், அடிக்கடி இடம்பெறும் தொடருந்து தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, தொடருந்துகளில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் சுகாதார சீர்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த தொடருந்தை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து அவர் கேட்டறிந்துள்ளார்.
இதேவேளை, எந்த வித முன்னறிவித்தலும் இன்றி அவர் நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார்.
மேலும், போக்குவரத்து அமைச்சர் சாதாரண பயணியாக தொடருந்தில் பயணிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.