ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கிடையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலைக்கு பதிலாக 1,890 பலஸ்தீனிய பணயக்கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும், விடுதலை செய்யவுள்ள கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிடாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க மாட்டோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையில் நாளை(19.01.2025) முதல் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட உள்ளது.
இதனையொட்டி, இந்த கைதிகளின் பரிமாற்றம் இடம்பெற உள்ளதாக போர்நிறுத்த நடுவராக செயற்படும் எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு 251 பேர் பணயக்கைதிகளாக காசாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹமாஸ் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் தாக்குதலில் 46,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களின் விளைவாக பலஸ்தீனியர்கள் தமது சொந்த இடங்களை இழந்து, ஒன்றரை வருடங்களாக பதுங்குக் குழிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
உணவு, தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வரும் பலஸ்தீனியர்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், தற்காலிகமாக அவர்களின் சாதாரண வாழ்வுக்கு திரும்பவுள்ளனர்.