திமுகவின் ஸ்டாலின் ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்- எடப்பாடி பழனிசாமி

0 1

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் திமுக அரசை சாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது.

நேற்று ஒரே நாளில் சென்னை தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு மளிகைக் கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இருசக்கர வாகனத்தில் பயணித்தோர் என்று அனைவரும் தங்களது நகைகளை பறிகொடுத்திருப்பது, இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.    

தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை; இந்த நிலைக்கு காரணமான நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனிய வேண்டும்.

நகைப் பறிப்பு போன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திரு. ஸ்டாலின் அவர்களே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்!

நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சுய விளம்பரங்களில் செலுத்தும் அதே கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் செலுத்துமாறு விடியா திமுக-வின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.