மகிந்த உயிருக்கு ஆபத்து…! பொய் பிரசாரம் செய்யும் எதிர்க்கட்சி : சாடும் அமைச்சர்

0 4

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பிற்காக 60 காவல்துறையினரும் 231 முப்படையைச் சேர்ந்தவர்களும் தற்போது உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சியினர் அதனை மறைத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று பொய்யான பிரசாரங்களைச் செய்து மக்களை திசை திருப்புவதற்கான சூழச்சியை முன்னெடுப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதிகளில் எந்த ஒருவரினதும் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரம் காவல்துறையினரே தீர்மானம் எடுக்கின்றார்கள். அந்த தீர்மானங்களில் கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று நாங்கள் தலையீடுகளைச் செய்வதில்லை.

அந்த வகையில் காவல்துறையினர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 176 காவல்துறையினரில் 116 பேரை குறைத்து 60 பேரை வழங்கியுள்ளனர்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதிக்கு இராணுவத்தைச் சேர்ந்த 64 பேர் உள்ளடங்கலாக 231 முப்படைகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்காக இன்னமும் உள்ளனர்.

ஆனால் அந்த விடயத்தினை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மறைத்துவிடுகின்றார்கள். மக்களை திசைதிருப்பும் சூழ்ச்சியுடன் தான் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.

அதேநேரம், அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் பொதுக்கொள்கையொன்றையே கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றபோது தனி நபர்களுக்கான பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவிடமுடியாது.

அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் கூட இன்னமும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் உள்ளனர்.

ஆகவே, எம்மைப் பொறுத்தவரையில் எமது அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் பாதுகாப்பு விடயத்தில் தலையீடுகளைச் செய்வதில்லை. அதனை காவல்துறையினரே இறுதி செய்கின்றார்கள்.

ஆகவே, அரசாங்கத்தின் மீது அரசியல் நோக்கத்துக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது “ என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.