அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே உயர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற முதலாவது அபிவிருத்தி கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடு தொடர்பில் இன்று(14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அறிவுபூர்வமாக படித்துத்தான் அவர்கள் அந்த பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள்.
ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை அணுகுவதற்கான முறை இருக்கிறது.
மனிதாபிமானத்தையும் மனித மூலதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நாங்கள் மிகவும் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடக்க வேண்டும்.
எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் அந்த பொறுப்போடும் கண்ணியத்தோடும் அரச உத்தியோத்தர்களோடு அணுகி செயல்படுவோம்.” என அவர் கூறியுள்ளார்.