கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தத் தீர்மானம் கடற்றொழிலாளர்களுக்கான மானியத்தை பெற்றுக்கொள்ளும் முறையை இலகுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் காலத்திற்கும் டீசல் மானியம் லிற்றருக்கு 25 ரூபா வழங்கப்படும்.
பொருளாதார நெருக்கடியால் கடற்றொழிலாளர்கள் சந்தித்து வரும் சிரமங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த அக்டோபர் 1ஆம் திகதி முதல் டீசல், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் பணியை அரசு தொடங்கியது.
அங்கு டீசல் மானியம் லீற்றருக்கு 25ரூபாவும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25ரூபாவும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 லீற்றர் என்ற அடிப்படையில் ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கு வழங்கப்பட்டது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட புதிய மானிய முறைமைக்கு இந்த மானியம் நடைமுறைப்படுத்தப்படும் போது இனங்காணப்பட்ட குறைபாடுகளுக்கு அமைவாக அமைச்சர்கள் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.