அநுர அரசில் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடமில்லை

21

முன்னைய அரசாங்கங்களின் நடைமுறையில் இருந்து விலகி, புதிய அரசாங்கம் ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க மாட்டாது, ஆனால் அதற்கு பதிலாக 26-28 பிரதி அமைச்சர்களை ஓரிரு நாட்களில் நியமிக்கும் என்று அமைச்சர் ஒருவர் நேற்று(18) தெரிவித்தார்.

புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ(Dr. Nalinda Jayatissa), பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சில அமைச்சரவை இலாகாக்களுக்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களே தவிர அனைத்து அமைச்சுக்களுக்கும் நியமிக்கப்படமாட்டார்கள். அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள், மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவைத்(Mahinda Siriwardana) தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத்(vijitha hearth) நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இன்று(19) தனது அலுவலகத்தில் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக கலாநிதி ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Comments are closed.