கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை இரண்டும் நமது இரண்டு கண்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று (27) மாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகியது.
த.வெ.க தலைவர் விஜய், மாநாட்டுக்கு வந்து திடலில் இருந்த ரசிகர்களைச் சந்தித்ததையடுத்து கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது.
இதையடுத்து. நூறு அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து த.வெ.க தலைவர் விஜய் உரையாற்றினார்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் நேற்று முன்தினம் (26) மாலை முதலே மாநாட்டு திடலை நோக்கி வரத்தொடங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மாநாட்டில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், சாதி, மதம், இனம், மொழி, பாலினம் மற்றும் பணம் எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட நிறத்தை பூசி, பாசிசம் என்று பேசிக்கொண்டு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை பயத்தைக் காட்டுவதாகவும் இந்த மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.கவின் கொள்கை எதிரி எனவும் திராவிடம், பெரியார் மற்றும் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசியல் களம், எதிர்கால அரசியல், இந்திய அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் ஆட்சி மாற்றம் என்பவை தொடர்பில் அவர் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.