எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி 113இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெறும் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறந்த அணி ஒன்று எம்மிடம் இருக்கின்றது. நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் சிறந்த அணியொன்றை எம்மால் உருவாக்க முடியும் என்று நினைக்கின்றேன்.
நாங்கள் வாக்குறுதியளித்தபடி புதிய முகங்களை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்குவதே எமது நோக்கம். நாட்டு மக்களுக்கு நாங்கள் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கவில்லை. நாங்கள் கூறியவற்றை நிச்சயம் செய்வோம்.
ஜனாதிபதி தேர்தலின் போது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவற்றை முன்வைத்துள்ளோம்.
நாட்டில் இருக்கும் ஏனைய அரசியல் தரப்புக்களோடும் இணைந்து பணியாற்ற நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருடர்களோடு எமக்கு கொடுக்கல் வாங்கல் இல்லை. நாட்டு மக்களை ஏமாற்றியவர்களுடனும் நாங்கள் கொடுக்கல் வாங்கல் செய்ய மாட்டோம்.
எனினும், நாட்டை ஸ்த்திரப்படுத்தும் அர்ப்பணிப்போடு செயல்படும் அனைவரோடும் நாம் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம்.
நிச்சயமாக எங்களால் பொதுத் தேர்தலில் 113 ஆசனங்களை அல்லது அதற்கு அதிகமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான முழு நம்பிக்கை எம் அணியினரிடம் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.