ஆபத்தான நிலையில் இருந்து “குணமடையும் நோயாளியை” செப்டம்பர் 21ஆம் திகதி அவசர சிகிச்சையின் போது தகுதியற்ற மருத்துவரின் கவனிப்புக்கு மாற்றி தவறு செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவரின் அனுமதிப்பத்திரத்தை இலங்கை மருத்துவ சபை இரத்து செய்வது போன்று, 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடமையை கைவிட்ட அரசியல் வாதிகளை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் மாநாட்டிலேயே இன்று(17.09.2024) இந்த கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நெருக்கடியான நிலையில் இருந்த பொருளாதாரம் இரண்டு வருடங்களுக்குள் முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காண்பிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருடன் ஒப்பிட்ட அவர், 2025 ஆம் ஆண்டில், குறித்த நோயாளியை ஒரு பொது அறைக்கு மாற்றும் நிலை ஏற்படும் என்ற எதிர்வை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், 2026 ஆம் ஆண்டில், இலங்கையின் பொருளாதாரம், மருத்துவமனையில் இருந்து முழுமையாக வெளியேற்றப்படும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.