புத்தளத்தில் பாடசாலையில் ஏற்பட்ட விபரீதம் : ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்

18

புத்தளம் பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் பிரதான நிலை பாடசாலையின் கணித பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பாடசாலையின் ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவனே ஆசிரியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த போது பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் ஆசிரியர் அவரிடம் கேட்டதையடுத்து மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரின் வயிற்றில் குத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கான ஆசிரியர் கீழே விழுந்ததாகவும் அந்த மாணவன் கத்தியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையில் என்ன பிரச்சினை காரணமாக கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றது என காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் மாணவனின் தலைமுடி தொடர்பில் சில விடயங்களை கூறியமையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்ட உயர்தரப் பாடசாலை மாணவனை கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்திலேயே காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.