புலம்பெயர் தேசத்துடன் இணைந்து தாகம் வெல்ல உழைப்பதே ஒவ்வொருவரினதும் முதன்மை கடமை: சிறீதரன்

14

கொள்கைரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஆத்மார்த்தமான அரசியற் பண்பாட்டின் அடிப்படையில், புதிய உலகச் சூழ்நிலைகளை அனுசரித்தவாறு எமது இனத்தின் சமத்துவ வாழ்வுக்கான பயணத்தை நாம் எல்லோரும் இணைந்து முன்னெடுக்க வேண்டுமென்ற காலக்கடமை எம் ஒவ்வொருவரது கரங்களிலும் தரப்பட்டிருக்கிறது.

ஈழத்தமிழினத்தின் இறையாண்மைக்கு நீதிவேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களையும், அபிலாசை வெளிப்பாடுகளையும் சிங்கள தேசம் எப்போது புரிந்துகொள்ளத் தலைப்படுகிறதோ, அப்போதுதான் அர்த்தம் மிகுந்த இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.

அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பினையும், இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயல்முறைகளையும் நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் தெளிவுற்றுள்ள போதும், அடிப்படை விருப்புகளைக் கோருகின்ற எமது அரசியல் உரிமையின் மீது போர்தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை, ‘தமிழ்த்தேசியம்’ என்னும் ஓர் குடையின் கீழ் நின்று கூட்டாய் எதிர்க்கும் திராணியை உருவாக்குவதில் தான் ஈழத்தமிழினம் இன்று பெருந்தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

எட்டு தசாப்தங்கள் கடந்தும், நீர்த்துப்போகாத அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின், அடிப்படை மற்றும் அரசியல் உரித்துகளை அங்கீகரித்து, அர்த்தமுள்ள அரசியல் அதிகாரப் பகிர்வின் மூலம் இனச் சமத்துவத்தை அங்கீகரிக்கின்ற, பொருளாதார சுபீட்சமுள்ள இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு, இலங்கை அரசு தொடர்ந்தும் தவறி வருகிறது என்பதை பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகள் உணர்ந்துகொள்ளும் காலமும் நேரமும் நெருங்கி வந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இத்தகையதோர் சாதகத்தன்மை மிக்க அரசியற் சூழமைவில் ஈழத்தமிழர்களின் குரலை, தமிழ்த்தேசியம் என்னும் இயங்குதளத்தில் நின்று கூட்டுக் குரலாக ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமானது.

தமிழ்த்தேசிய அரசியலில் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளைத் தீர்மானித்தல், சர்வதேச உறவுகளை மெய்நிலையில் வலுப்படுத்தல், இளைய தலைமுறை அரசியலாளர்களை வலுப்படுத்தல், மக்களை அரசியல்மயப்படுத்தல், மக்களின் உணர்ச்சியையும் திரட்சியையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தல் உள்ளிட்ட அரசியற் செல்நெறிகளை செயலுருப்பெறச் செய்ய வேண்டியுள்ளது.

மேற்கூறிய அத்தனையையும், இனநலன் ஒன்றையே நோக்காகக் கொண்ட நல்ல தலைமைத்துவத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியும். வினைத்திறனான தலைமைப் பண்புகளுக்குள் இவை அனைத்தும் அடங்கும்.

இப்போது நம் இனத்துக்கு இருக்கும் மிகப்பெரிய இடைவெளி ஆதர்சனத் தலைமையற்ற தன்மையே. சனத்திரட்சியை உருவாக்கக்கூடிய, ஜனவசியம் மிக்க, மிக நேர்த்தியான தலைமைத்துவத்தை யாராலும் சரியான முறையில் கொடுக்க முடியவில்லை. அல்லது அத்தகைய அணுகுமுறைகள் குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் அதற்கான களச்சூழலை உருவாக்க வேண்டியது காலப் பெரும் பணியாக எம்முன் உள்ளதை நாம் உணரத் தலைப்பட வேண்டும்.

நம் எதிரிகள் ஒரு காலத்தில் நம் தலைவர்களை அழித்தார்கள். இன்று தலைவர்கள் உருவாகுவதற்கான சூழலை அழிக்கின்றார்கள். பொது எதிரியை எதிர்கொள்வதற்காக எமக்குள் உள்ள எதிர்ப்புணர்வுகளை புறம்தள்ளி ஒரு பொதுவான அரசியல் இயக்கத்துக்குள் நாம் நிலமும் புலமுமாக இணைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Comments are closed.