பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள முக்கிய ஒப்பந்தம்

0 0

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா முக்கிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது.

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய சம்பவம், பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது.

 பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், பிரித்தானியா பல சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் செய்வது கடினமாயிற்று. பிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கு சில உணவுப்பொருட்களை அனுப்புவதிலேயே பல பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதற்கிடையில், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியது, தனித்து நிற்கும் பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சத்தை உருவாக்கியது. நேட்டோ அமைப்பிலிருக்கும் அமெரிக்கா, பிற உறுப்பு நாடுகளுக்கு உதவுவதற்கு பதிலாக, ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கிறது.

அது போதாதென்று, ட்ரம்ப் வேறு பல்வேறு வரிகளை விதித்து வருகிறார். ஆக, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருந்திருந்தால் இத்தகைய பிரச்சினைகளை எளிதாக கையாண்டிருக்கலாமோ என்னும் எண்ணம் பலருக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான பிரித்தானிய அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நட்பாகச் சென்றால், இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கும் என கருதுகிறது.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது, இந்த ஒப்பந்தத்தால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அதே அளவில் பிரித்தானியாவுக்கு இந்த ஒப்பந்தத்தால் இலாபம் உள்ளதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.  

காரணம், இந்த ஒப்பந்தம் மூலம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரித்தானிய கடல் பகுதியில் 12 ஆண்டுகள் கடற்றொழிலுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பிரித்தானியாவுக்கு வர அனுமதியளிக்கப்பட உள்ளது.

ஆக, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், யாருக்கு அதிக இலாபம், பிரித்தானியாவுக்கு என்ன கிடைக்கும் என கேள்வி எழுந்துள்ள நிலையில், ஒப்பந்தம் குறித்த முழுமையான விபரங்கள் வெளியானால் மட்டுமே இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave A Reply

Your email address will not be published.