பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்( Emmanuel macron) பெரிய கூட்டணி ஒன்றை அமைக்க அழைப்பு விடுத்துள்ள விடயம், அதிக வாக்குகள் பெற்ற இடதுசாரிக் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இவர் பிரான்ஸ் மக்களுக்கு எழுதி வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், தங்களை குடியரசுவாதக் கட்சிகள் என கருதும் கட்சிகள் அனைத்தும் இணைந்து, புதிய, பெரிய கூட்டணி ஒன்றை அமைக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்படி தீவிரக் கொள்கை கொண்ட வலதுசாரிக் கட்சியை மட்டுமல்ல, தற்போதைய தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளையும் ஒதுக்கவேண்டும் என்பது அதன் பொருள் என தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே, இடதுசாரிக் கட்சியினருக்கு மேக்ரானுடைய கடிதம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மேக்ரான் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
அத்துடன், அதிக ஆசனங்கள் பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க மேக்ரான் அனுமதிப்பதே இப்போதைய சூழலில் அவர் நாட்டுக்குச் செய்யும் சிறந்த விடயமாக இருக்கும் என இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரான்சில் நடந்துமுடிந்த இரண்டாவது சுற்று தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகவே, கூட்டணி அமைத்துத்தான் கட்சிகள் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.