அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாவாரா கமலா ஹாரிஸ்: வலுக்கும் ஆதரவு

17


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தமது மறுமுறை தேர்தல் பிரசாரத்தைத் தொடர்வதில்லை என்று முடிவு செய்தால், அவருக்குப் பதிலாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சிறந்த மாற்று வேட்பாளராக இருப்பார் என்று வெள்ளை மாளிகை மற்றும் ஜனநாயக தேசியக் குழு ஆகியவற்றின் மூத்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்ட் டிரம்பிற்கு எதிரான விவாதத்தின்போது, பைடன் தடுமாறி, சில சமயங்களில் பொருத்தமற்ற பதில்களை வழங்கியமையானது, ஜனநாயகக் கட்சிக்குள் பீதி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து வயது மூப்பு காரணமாக பைடன், தேர்தல் போட்டியில் இருந்து விலகவேண்டும் என்று வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் சில செல்வாக்கு மிக்க ஜனநாயகக் கட்சியினர், கமலா ஹாரிஸைத் தவிர பைடனுக்கு மாற்றாகக் களமிறக்க விருப்பம் கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த கவின் நியூசோம், மிச்சிகனின் கிரெட்சென் விட்மர் மற்றும் பென்சில்வேனியாவின் ஜோஸ் சாபிரோ போன்ற ஜனநாயகக் கட்சி ஆளுநர்களும் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

கட்சி வேட்பாளராக பெயரிடப்பட்டால், 59 வயதான கமலா ஹாரிஸ், பைடனின் பிரசாரத்துக்காக திரட்டப்பட்ட பணத்தை பெற்றுக்கொள்வார் அத்துடன் பிரசார உட்கட்டமைப்புகளையும் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாயன்று வெளியிடப்பட்ட ரொய்ட்டர்ஸ்ஃஇப்சோஸ்( Reuters/Ipsos ) கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸ் டிரம்பை ஒரு சதவீதப் புள்ளியில் அதாவது 43க்கு 42 என்ற அடிப்படையில் பின்தள்ளினார்.

அதேநேரம் கடந்த வார விவாதத்தின் பின்னர் குடியரசுக்கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகித்தாலும், கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் அவருக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தநிலையில் ஐக்கிய அமெரிக்கா இதுவரை ஒரு பெண் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.