இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் விழாவின் வெற்றிகளும் தோல்விகளும் – முழுமைப்பார்வை

16

17 வருடங்களுக்கு பின்னர் இந்திய கிரிக்கட் அணி, உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுள்ளமை தொடர்பில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் அணிக்கான சிறந்த பயிற்றுவிப்புக்காக தலைமை பயிற்றுவிப்பாளர் ராகுல் ட்ராவிட்டுக்கும், சிறந்த வழிநடத்தலுக்காக அணியின் தலைவர் ரோஹிட் சர்மாவுக்கும், இறுதிப்போட்டி வரை இந்திய அணி முன்னேறுவதற்கு தமது சிறப்பாட்டங்களை வெளிக்காட்டிய வீரர்களுக்கும் ரசிகர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் இறுதிப்போட்டியின்போது, ஏனைய போட்டிகளில் சிறப்பாக செயற்படாத விராட் கோலி சிறப்பாக செயற்பட்டமை, பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள் தடுமாறியபோது, மூன்று மிதவேக பந்து வீச்சாளர்களான பும்ரா, அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயற்பட்ட விதத்தையும், சூரியகுமார் யாதவின் ஆறு ஓட்டங்களை தடுத்த சிறப்பான பிடியெடுப்பையும் பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்த உலகக்கிண்ண வெற்றியை இந்தியா கொண்டாடுகின்றபோதும், ஆரம்பத்திலிருந்தே இந்த உலகக்கிண்ணம் இந்திய அணிக்கு வாய்ப்பாகவே வடிவமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தன.

குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் இந்தக்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

எனினும், அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இந்திய அணியின் ஒட்டுமொத்த சிறப்பாட்டத்தை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாத வாதமும் முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த கால போட்டிகளில் இந்திய வீரர்களின், பொறுமையின்மை மற்றும் உணர்ச்சிவசப்படும் வெளிக்காட்டுதல் போன்ற விடயங்களை கவனிக்கும்போது இந்த உலகக்கிண்ணத்தில் அவர்களின் செயற்பாடு, சிறப்பாகவே அமைந்திருந்தது.

அதிர்ச்சியூட்டும் தருணங்களிலும் அவர்களின் மனவலிமை மற்றும் பொறுமை அதிகமாகவே இருந்தமை அவதானிக்கமுடிந்தது.

இந்தநிலையில் போட்டிகளின் பின்னர், இந்திய அணியின் தலைவர் ரோஹிட் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 20க்கு20 போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்தமையானது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கூட, ரோஹிட்டும் கோலியும் வெற்றிப் பெருமையுடன் ஓய்வுப்பெறுவது, அவர்களை பொறுத்தவரை திருப்தியான ஓய்வாகவே அமைந்துள்ளது.

அத்துடன், இந்த வெற்றியுடன் இந்திய அணிக்கு புதிய தலைவர் ஒருவர் அறிவிக்கப்பட்டால், அந்த தலைவரும் சிறப்பாக செயற்படமுடியும் என்ற நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

இது கிரிக்கெட் நிபுணர்களை பொறுத்தவரையில் சிறப்பான முடிவாகவே கருதப்படுகிறது.

மறுபுறத்தில் தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரையில் அந்த அணி உலகக் கிண்ண 20க்கு20 கிரிக்கட்டில் முதல் தடவையாக இறுதியாட்டத்துக்கு தெரிவானபோதும், இறுதியாட்டத்தில் வெற்றி பெறமுடியாமை கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது.

எனினும், அந்த அணியின் வீரர்களது திறமையை சிறப்பாகவே பார்க்கவேண்டும். இந்திய அணியைப்போன்று தென்னாபிரிக்க அணியும் ஆரம்பம் முதலே தமக்கான போட்டிகளில் தோல்விகளை தழுவாமல் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

இறுதிப்போட்டியின்போது ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை என்ற வலுவான நிலையில் இருந்தபோது, அவர்களின் பொறுப்பு மிக்க ஆட்டம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், இந்த இறுதியாட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றிருக்கும்.

இருந்தபோதிலும், அந்த இடத்தில் தென்னாபிரிக்க அணி விட்ட தவறே, அந்த அணிக்கு தோல்வியை பெற்றுக்கொடுத்துள்ளது.

1991ஆம் ஆண்டு உலகக் கிரிக்கெட்டுக்குள் மீண்டும் பிரவேசித்த தென்னாபிரிக்க அணி தொடர்ந்தும் வலிமையான அணியாகவே செயற்பட்டு வருகிறது.

இதேவேளை, உலகக்கிண்ண 20க்கு20 கிரிக்கெட்டில் ஏனைய அணிகளை பார்க்கும்போதும் புதிதாக வந்த அமெரிக்க அணி, தமது திறமையை காட்டியிருந்தது.

அதேநேரம், ஆப்பானிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் கணிப்பின்படி, அரையிறுதி ஆட்டம் வரை முன்னேறி எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், அரையிறுதியில் அந்த அணியின் ஆட்டத்தில் கலந்திருந்த உணர்ச்சிவசப்படும் நிலை, அந்த அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது என்று கூறலாம்.

இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய முக்கிய அணிகள் பாரிய பின்னடைவை கண்டன.

கனடா அணியின் வெளிப்பாடு இந்த போட்டிகளை பொறுத்தவரை போதுமானதாகவே இருந்தது.

மழை காரணமாக பல அணிகளுக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போனமையும் இந்த உலகக்கிண்ணத்தில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவங்களாக அமைந்திருந்தன.

ஒட்டுமொத்தத்தில் கடந்த ஒரு மாதக் கிரிக்கெட் விழா, இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்தி முடிவடைந்துள்ளதோடு ஏனைய நாட்டு அணிகளுக்கு சிறந்த பாடத்தையும் கற்றுக்கொடுத்துள்ளது.

Comments are closed.