அரையிறுதியில் படுதோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் – எழுந்துள்ள விமர்சனம்

15

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற்ற மைதானத்தின் ஆடுகளம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தென் ஆபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்த முதல் அரை இறுதி போட்டியில் விளையாடின.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 56 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டி தொடரில் அரை இறுதிப் போட்டி ஒன்றில் முதலில் துடிப்பெடுத்தாடிய அணி ஒன்று பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்டங்களாக இந்த ஓட்ட எண்ணிக்கை கருதப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகளின் ட்ரினிடாட்டின் பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டி நடைபெற்ற மைதானத்தின் ஆடுகளம் மிகவும் மோசமான ஓர் ஆடுகளம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீபன் ஃபின் இந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு பொருத்தமானது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு ஆடுகளத்தில் டி20 போட்டி ஒன்றை நடத்தியமை தவறானது என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு அணிகளும் துடிப்பெடுத்தாடுவதில் சவால்களை எதிர் நோக்க நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனை அலெக்ஸ் ஹார்ட்லியும் இந்த ஆடுகளம் தொடர்பில் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆடுகளத்தின் பந்துகள் சீரற்ற விதத்தில் எழுவதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். உலகக் கிண்ண போட்டி ஒன்றில் தாம் பார்த்த மிகவும் மோசமான ஆடுகளம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், தென் ஆபிரிக்க அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 60 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Comments are closed.