மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதான வீதியில் வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (4) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை கொண்டு செல்லப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, வாகனமும் அதன் சாரதியும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் நிறையுடைய 250 அரிசி மூடைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்த விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இவ்வாறு ஒரு தொகுதி அரிசி மூடைகள் கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிந்த பல அரசியற் கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.