உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தொடர்புள்ளது என்ற கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இது டிசம்பர் 15, 2006 அன்று நடந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையது.
இந்நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சட்டத்தரணி உதய கம்மன்பில, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானைச் சந்தித்து நேற்று (15) அரை மணிநேரம் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.