இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை இந்தியா மீண்டும் முன்மொழிந்துள்ளது.
எனினும், இலங்கை அரசாங்கம், அது தொடர்பில் இன்னும் உறுதியளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2002 ஆம் ஆண்டில், அப்போதைய இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் இடையில் ஒரு நிலப் பாலத்தை முன்மொழிந்தது.
அது ராமர் சேது அல்லது ஆதாமின் பாலம் என்று அழைக்கப்படும் பண்டைய நில இணைப்பை அடிப்படையாகக் கொண்டது. திட்டத்தின் படி, வீதி மற்றும் தொடருந்து பால இணைப்புகளை உருவாக்க முன்மொழியப்பட்டது. பின்னர், இரு தரப்பினரும் மீண்டும் இந்தத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.
அந்த விடயம், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதுடில்லிக்கு விஜயம் செய்த பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இந்த தரைப்பாதை விடயம் சேர்க்கப்படவில்லை.
இதனையடுத்தே, பிரதமர் மோடியின், அண்மைய இலங்கை வருகையின் போது, இந்தியத் தரப்பு அதை முன்மொழிந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு உடனடியாக அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், பிரதமர் மோடி, இந்தியப் பெருங்கடலில் 48 கிலோமீற்றர் வரை பரந்து விரிந்திருக்கும் இயற்கை சுண்ணாம்புப் பாறைகளின் பரந்த சங்கிலியான ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேதுவையும் தரிசனம் செய்தார்.
இந்தப் பழங்கால நிலப் பாலம்,புவியியல், வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவத்துவத்தை கொண்டுள்ளது. இந்த பழங்கால சுண்ணாம்புப் பாலம் இராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதேவேளை முன்மொழியப்பட்ட எட்கா என்ற பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே ஆடை ஏற்றுமதி ஒதுக்கீட்டை 50 மில்லியன் அலகுகளாக அதிகரிக்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை இந்தியா பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 44 சதவீத வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது வரிகளுடன் போராடும் வணிகங்களை காப்பாற்றுவதற்கான புதிய வழிகளை இலங்கை தற்போது ஆராய்ந்து வருகிறது.
இதனடிப்படையிலேயே, இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுமதி செய்வதற்கான ஒதுக்கீட்டை தற்போதைய 8 மில்லியனில் இருந்து 50 மில்லியன் அலகுகளாக விரிவுபடுத்துமாறு இந்தியாவிடம் இலங்கை கோரியதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எட்கா தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கும்; போதே, இலங்கையின் கோரிக்கையை இந்தியா பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.