ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவந்தபோது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேன அதற்கு இடமளிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான தடை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், எமது இராணுவ வீரர்களுக்கு தடைவிப்பதாக இருந்தால், அது பிரித்தானியாவின் சர்வதேசம் தொடர்பான இரட்டை நிலைப்பாட்டையும் எடுத்து காட்டுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்துக்கு தலைமை தாங்கிய 3 இராணுவ தளபதிகளுக்கு பிரித்தானியா தடை விதித்திருப்பதன் மூலம் பிரித்தானியாவின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.
ஏனெனில் காசாவில் இஸ்ரேல் இராணுவம் அங்கு இனப்படுகொலைகளை மேற்கொள்ள அமெரிக்கா உதவி வருகின்றபோது, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பிரித்தானியா பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்துக்கு தலைமை தாக்கியமைக்காக எமது இராணுவ வீரர்களுக்கு தடை விதித்திருக்கிறது.
அத்துடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவந்தபோது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேன அதற்கு இடமளிக்காமல், உள்ளக பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தனர்.
அந்த பிரேரணை தற்போதும் செல்லுபடியானதாக இருக்கிறது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் அந்த முயற்சியிலேயே இருந்து வருகின்றன.
அத்துடன் காசாவில் இஸ்ரேல் இராணுவம் சிறுவர்கள், பெண்களை கொலை செய்து அங்கு இனப்படுகொலை செய்து வருகிறது. அதற்கு பிரித்தானியா ஆதரவளித்து வரும் நிலையில் 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு தடைவிப்பதாக இருந்தால், அது பிரித்தானியாவின் சர்வதேசம் தொடர்பான இரட்டை நிலைப்பாடாகும்.
அதனை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த தடை மூலம் எமது நாட்டில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தக்குற்றம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என செய்தியையே வழங்கி இருக்கிறது.
என்றாலும் எமது நாட்டின் உள்ள விடயங்களில் சர்வதேச சக்திகள் தலையிடுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அதனால் எமது நாட்டின் கெளரவத்தை அரசாங்கம் மதிப்பதாக இருந்தால், பிரித்தானியாவின் இந்த தடை விதிப்பை அரசாங்கம் கண்டிப்பதுடன், இதுதொடர்பில் தனது நிலைப்பாட்டையும் தெரிவிக்க வேண்டும்” என்றார்.