யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மாவட்டத் தொழில் நிலையமானது 40இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு ஒன்று நடாத்தவுள்ளது.
குறித்த நிகழ்வானது எதிர்வரும் சனிக்கிழமையன்று (08.03.2025) காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இத்தொழிற்சந்தை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் நிறுவனங்கள். கணக்கியல்துறை, ஹோட்டல்கள், காப்புறுதித்துறை, ஆடைத் தொழிற்சாலை, பாதுகாப்புச்சேவை, தாதியர் வேலைவாய்ப்பு, கணனித்துறை, தொழிற்பயிற்சி நெறிகள், ஹோட்டல் முகாமைத்துவம், சுயதொழில் ஊக்குவிப்பு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் வருகை தரவுள்ளதுடன் தங்கள் நிறுவனத்தில் காணப்படும் 500இற்கு மேற்பட்ட வெற்றிடங்களுக்காக அன்றையதினமே நேர்முகத்தேர்வினை நடாத்தவுள்ளன.
மேற்படி தொழிற்சந்தை நிகழ்வில் தொழில்தேடும் இளையோர்கள் தங்களது தகைமைகளை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களுடன் கலந்து கொள்வதன் மூலமாக தமக்குப் பொருத்தமான தொழில் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே தொழில் வாய்ப்பொன்றினை பெற்றுக்கொள்ளக்கூடிய இந்த சந்தர்ப்பத்தைப் பயன்டுத்தி பயனடையுமாறு யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு 0212219359 என்ற தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.