இலங்கை உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

0 8

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு, எதிர்க்கட்சிகள் தேசிய தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையகத்திடம் இது தொடர்பில் எழுத்துப்பூர்வ கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara), 2025 பாதீடு இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதால் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பாதீடு தொடர்பான அமர்வுகள், பெப்ரவரி 17 முதல் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என்றும், மார்ச் மாத இறுதியிலேயே முடிவடையும் என்றும், எனவே இது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் 66 உறுப்பினர்களும் பாதீட்டு விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், அது அவர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பாதிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara), ஏப்ரல் புத்தாண்டு மற்றும் க.பொ.த சாதாரண தரத் தேர்வுகளை கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதீடு காரணமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தநிலையில் எதிர்க்கட்சியினரை நாடாளுமன்றத்தில் தடுத்து தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க எதிர்க்கட்சி கோரவில்லை என்று கூறிய மத்தும பண்டார, அதற்கு பதிலாக ஏப்ரல் இறுதி வரை அதை ஒத்திவைக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.