முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) மைத்திரிபால சிறிசேனவுக்கும் (Maithripala Sirisena) இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (13) பிற்பகல் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா (Anura Priyadharshana Yapa), சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha), மகிந்த அமரவீர (Mahinda Amaraweera), நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva), உதய கம்மன்பில (Udaya Gammanpila), நிமல் லான்சா (Udaya Gammanpila), ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne), ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene), சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) மற்றும் மேலும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்தக் கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, “பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தது. ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் வரவில்லை. எதிர்காலத்தில் அவர்களும் கலந்துரையாடலில் இணைவார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவதா அல்லது தனித்தனியாகப் போட்டியிடுவதா என்பதை விரைவில் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.” என தெரிவித்தார்.
இதேவேளை கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவிக்கையில், “விசேட கலந்துரையாடல் எதுவும் இல்லை. இது ஒரு நட்புரீதியான சந்திப்பு. முன்னாள் ஜனாதிபதி எங்களை வரச் சொன்னார், அதனால் நாங்கள் வந்தோம்.” என குறிப்பிட்டார்.