தமிழக மாவட்டம் ஈரோட்டில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை நண்பரே குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோட்டின் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேது மணிகண்டன் (23). நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டிங் வேலை பார்த்து வந்த இவரும், வீட்டிற்கு அருகே வசித்த பெண்ணொருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் அப்பெண் அவரை விடுத்து, சேதுவின் நண்பர் குகநாதனை காதலித்துள்ளார். இந்த நிலையில் குறித்த இளம்பெண்ணுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள்.
இதனால் சேது மணிகண்டன் அப்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதேபோல் குகநாதனும் அப்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சேது மணிகண்டன் அவரிடம் போனில் சண்டையிட்டுள்ளார்.
இதனையடுத்து பவானி மருத்துவமனை அருகே சேது மணிகண்டன் நின்றுகொண்டிருந்தபோது குகநாதன் அங்கு வந்துள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது குகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேது மணிகண்டனின் மார்பு, வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சேது மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சேது மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குகநாதனை கைது செய்தனர்.
Comments are closed.