சஜித்துக்கு எதிராக ரணிலும் அனுரவும் சேர்ந்து கூட்டுச் சதி: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

17

 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் நடவடிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்(Ranil Wickremesinghe), தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும்( Anura Kumara Dissanayake) இணைந்து செயற்படுகின்றனர் என தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி(Hector Appuhamy) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அநுரகுமார திசாநாயக்க பேச்சு நடத்தியுள்ளார் என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் தேடிப் பார்க்கின்றோம்.

அரச ஊடகமொன்றில் அனுரகுமார திசாநாயக்கவுக்கு 3 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனமொன்றில் இவ்வாறு நேரம் ஒதுக்கப்படுவதன் நோக்கம் என்ன? வங்குரோத்து அடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு வேலைத்திட்டம் அவசியம்.

சர்வதேச நாணய நிதி ஊடாக கிடைக்கும் கடன் தொகையைக்கூட ஆளுநர் ஊடாக வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக பிரசாரம் முன்னெடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும், தேசிய மக்கள் சக்தியும் இணைந்துள்ளன. இவை தொடர்பான தகவல்கள் விரைவில் கிடைக்கப் பெறும்.” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.