சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரம் தமிழர்களுக்கு வேண்டும்! ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சம்பந்தனின் செய்தி
பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அளவில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் (R. Sampanthan) தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 17இற்கும், ஒக்டோபர் 16இற்கும் இடையில் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னமும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை.
சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திசாநாயக்கவும் தாங்கள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு, போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியன் பின்னர் தான் நாம் உறுதியான முடிவொன்றுக்கு வரமுடியும்.
தற்போது அனைத்துக் கருமங்களையும் அவதானத்தில் கொண்டுள்ளோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும், கருமங்களையும் முன் வைக்கப்போகின்றார்கள் என்பதை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே அவர்கள் உள்ளக சுயநிர்ணயத்துக்கு உரித்துடையவர்கள்.
இதனடிப்படையில் பிரிக்க முடியாத, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்டு அவை மீளப் பெறப்படாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த விடயத்தினை தலைவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமன்றி தென்னிலங்கை சிங்கள மக்களிடத்திலும் அந்த விடயத்தினை முன்வைத்து தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.