ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த வாரம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பானது இரு நாடுகளுக்கும் இடையே சாத்தியமான ஆயுத வர்த்தகத்திற்கு அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடும் என்ற அச்சத்தையும் எழுப்பியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இரு தலைவர்களும் வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் சந்தித்து தங்கள் திட்டங்கள் மற்றும் கூட்டாண்மை குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையானது வர்த்தகம், போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை விவாதிப்பதில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உக்ரைனுக்கு எதிராக அபாயகரமான ட்ரோன்களை ரஷ்யாவுக்கு ஈரான் விநியோகம் செய்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருநாடுகளும் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளன.
தற்போது, இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் விமானங்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப ரஷ்ய ஆயுதங்களை ஈரான் நாடுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், சர்வதேச தடைகள் அதன் இராணுவ வலிமையை மட்டுப்படுத்தியுள்ளதால், ஈரான் தற்போது சுகோய் Su-35 போர் விமானங்களை வாங்குவதில் குறிப்பாக ஆர்வமாக உள்ளது.
ஜனவரி 17 ஆம் திகதி, மாஸ்கோவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் மசூத் பெஷேஷ்கியனுடன் ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றே ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2022ல் உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவும் ஈரானும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றன. மட்டுமின்றி உள்கட்டமைப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைக்கப் பயன்படுத்தப்படும் ஷாஹெத் ட்ரோன்களை ஈரான் வழங்குகிறது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், எதிரிகளிடமிருந்து ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பைப் பாதுகாக்கும் வகையில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் புடின் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதன் பின்னரே, வடகொரிய துருப்புகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் போரில் களமிறக்கப்பட்டது. தற்போது ஈரானுடன் நெருக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் புடின், அந்த நாட்டு இராணுவத்தை உக்ரைனுக்கு எதிராக களமிறக்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.