தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : வெளியான தீர்ப்பு

0 4

அண்மையில் நிறைவடைந்த தரம் 05இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் (Grade 05 Scholarship Examination) முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வெளியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது, அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுநர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, அந்த பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனூடாக, தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.